Home 2020 LGBTQ Conference LGBTQ இணைய கருத்தரங்கம்: நாள் 3 – சமூகச்சிக்கல்களும் சாதனைகளும்

LGBTQ இணைய கருத்தரங்கம்: நாள் 3 – சமூகச்சிக்கல்களும் சாதனைகளும்

by Malarvizhi Baskaran
0 comment

மூன்றாம் நாள் நிகழ்வு 

ஏழாவது கருத்துரையை வழங்கிய இலங்கையைச் சார்ந்த ஏஞ்சல் குயின்ரஸ் சமூகத்தில் தங்களுக்கான இடம் பற்றிய விழிப்புணர்வு இருந்ததால் கல்வி கற்கும் பொருட்டு எட்டு வயதில் உணர்ந்த தனது நிலையைப் பதினாறு வயதில் வெளிப்படுத்தியதாகவும் இந்த ஒடுக்குமுறையே சமூகம் பற்றிய சிந்தனையைத் தனக்குக் கொடுத்தது என்றும் கூறினார்.

இந்தியாவில் அதிகார ஒடுக்குமுறை, திருநங்கையருக்குள்ளும் ஒருவரையொருவர் ஒடுக்குதல் உள்ளது. அது போன்று இலங்கையிலும் வந்துவிடக்கூடாது என்று நினைத்தோம் என்று கூறினாலும் இந்தியாவில் தனக்கு அநேகம்பேர் உதவி செய்திருக்கிறார்கள். அதற்குத் தான் நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் கூறினார்.

இலங்கையில் Jafna Transgender Network அமைப்பின்வழி சுயதொழிலுக்கான உதவியும் பயிற்சியும் வழங்குதல், இவர்கள் தமது அடையாளத்தை வெளிப்படுத்துவதற்கான சிக்கல் இருப்பதால் உளவியல் ரீதியாக ஆறுதல் தருதல், உங்கள் வாழ்க்கையை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வைக் கொடுத்தல் என்கிற வகையில் பணிசெய்து வருவதையும் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் இப்படியொரு சமூகம் இருப்பதையும் இவர்களது சிக்கல்களையும் சொன்னால்தான் தெரிகிறது என்றும் கூறினார். இலங்கையில் இளைஞர்கள்  மத்தியில் தங்களுக்கு ஆதரவு அதிகம், தங்களோடு அவர்கள் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தெரிவித்தார்.

எட்டாவது கருத்துரை தென்கொரியாவில் வசித்துவரும் தோழர் சம்யுக்தா விஜயன். தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். இந்தச்சமூகம் பற்றிச் சிந்தித்த கணத்திலிருந்தே நான் பெண் என்று கூறும் இவர் தனது குடும்பம், பள்ளி, ஆசிரியர், நண்பர்கள் எனத் தன்னைச் சுற்றியிருந்த அனைவருடைய ஆதரவும் இருந்ததால் தனது வாழ்வில் எத்தகைய சிக்கலும் இல்லை என்று கூறினார். இந்தியாவில் இது பற்றிய ஆய்வுகள் நிறைய நடக்கவில்லை. திருநங்கையர் குறித்த சொற்களின் ஆய்வினைவிடப்  புரிதல்தான் முக்கியம் என்று கூறினார்.

பாலினம் பற்றிய இவரது அறிவியல் ரீதியான விளக்கம் தெளிவாக, பயனுள்ளதாக, மிகுந்த புரிதலுடன் கூடியதாக இருந்தது. இவ்வுலகம் பகல் மற்றும் இரவால் ஆனது என்றாலும் முற்பகல், பிற்பகல், சாயுங்காலம் என்றிருப்பதைப்போல ஆண், பெண் என்பதும் முழுமையானதல்ல. இது ஒரு Spectrum. பால் (Biological sex), பாலினத்தை அடையாளப்படுத்துதல் (Gender Identity), வெளிப்படுத்துதல் (Gender Expression), பால்நிலை குறித்த பயிற்சி (Sexual Orientation) என்கிற நான்கு நிலைகளுக்குள்தான் நாம் இருப்போம் முழுமையான ஆண், பெண் என்பது இல்லை என்று விளக்கினார்.

ஓன்பதாவது உரைக்குரியவர் சென்னை, தமிழ்த்திரையுலகில் இயக்கம், எழுத்து, தயாரிப்பு என்று பல பரிமாணங்களில் சாதனை படைத்து வரும் தோழர் மாலினி ஜீவரத்தினம். தான் வாசித்த நூல்கள், நண்பர்கள், பணியிடத்தில் இடத்தில் உடனிருந்தோர் ஆதரவு இவையே தன்னை வெளிப்படுத்த உதவியதாகக் கூறினார். திரையுலகில் படம் தயாரிக்க நிறைய திருநங்கையர் முன்வந்திருப்பது மாற்றத்தைக் காட்டுகிறது. நான் வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்களின் கருத்துக்களை, என்னைப் பற்றிய பேச்சுக்களை எனது படைப்புகளில் பயன்படுத்துவேன் என்றார். திரைப்படங்களில் கதாநாயகன் திருநங்கையாக வேடமிடுவது வரவேற்கத்தக்க ஒன்று என்றாலும் வேடமிடுவதற்கும் தாங்களே நடிப்பதற்கும் வேறுபாடு உண்டு என்றும் கூறினார். இருபத்தொன்றாம் ஆண்டில் திருநங்கையர் பற்றிய,  இவர்கள் பணிசெய்த திரைப்படங்கள் நிறைய வெளியிடப்படவிருக்கின்றன என்று தெரிவித்தார். தமிழ்ச்சமூகத்தில் திருநங்கையருக்கான தனித்த இடம் என்பது சவாலான விசயம்தான் என்றார்.

மூன்றாம்நாள் சிறப்புரை வழக்கறிஞர் சன்னாவினுடையது. பாலியல் பாதையில் சமூக, அரசியல் நிலைப்பாடுகள் பற்றிப் பேசினார். பதினெட்டு வருடங்களுக்கு முன் புதிய கோடாங்கி இதழுக்காகத் திருநங்கையருக்குச் செய்த இலக்கியப்பயிற்சி முகாம் ஒன்று தனக்கு இவர்கள் பற்றிய அறிதலுக்கு அடிப்படையாக அமைந்ததாகவும் முகாமிற்குப் பிறகு களப்பணி செய்து இவர்களது வாழ்வியல் மற்றும் இவர்களது படைப்புகளைக் கொண்டு சிறப்பிதழாகவே கொண்டு வந்தது அக்காலகட்டத்தில் மிகுந்த சலசலப்பை உண்டு பண்ணியதாகவும் கூறினார். இதைத்தொடர்ந்து திருநங்கையருக்குச் சட்டசபையில் தனித்த இடம் கேட்க சட்டவழி முறைகளை எடுத்துக்கூறியது. அரவாணி என்பது பெண்பால், உருவாக்கப்பட்டது – கலைஞர் கருணாநிதி ஆட்சியில்; இந்த அரவாணி என்கிற பெயர் திருநங்கை, திருநம்பி என மாற்றம் பெற்றது, தமிழ்ச்சமூகத்தில் அரசியல் ரீதியான புரிதல் இருந்ததால் இது சாத்தியமானது என்றும் நலவாரியம் அமைக்கப்பெற்றது பற்றியும் கூறினார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்த ஒடுக்குமுறைகள் மாற்றம் பெற இது போன்ற கருத்தரங்கு தேவை என்றார். மொழியைக் கட்டமைப்பவர்கள் ஆண்களே, Gender என்னும் சொல்லின் முதல் பகுதியே Gen என்னும் ஆண் மையத்தை, முதன்மையைத்தான் குறிக்கிறது. மக்களிடம் ஏற்பு கிடைத்திருப்பது கடந்த பத்து ஆண்டுகளாகச் சாதனை நிகழ்ந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது.

வெறும் பேச்சாக மட்டும் இல்லாமல் தமிழ் மரபு அறக்கட்டளைக்குச் சில கோரிக்கைகளையும் முன்வைத்தார்.  மொழி ஆண் மொழியாகத்தான் இருக்கிறது. சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் ஒரு இடமாவது வேண்டும். பள்ளிக்கல்வியிலிருந்தே  பாலினச்சமத்துவம் மற்றும் மாற்றுப்பாலினம் குறித்த கல்வி வழங்கப்படவேண்டும். மனித இனத்தில் 120 பிரிவுகள் இருப்பதாகக் கணக்கெடுத்திருக்கிறார்கள். இவர்களது பிரிவுகளுக்குரிய பெயர்களைக் கண்டறியவேண்டும். தமிழறிஞர்களும் தமிழ் மரபு அறக்கட்டளையும் முன்னெடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அறிக்கை  தயாரிப்பு: முனைவர். பாப்பா

நிகழ்ச்சியின் காணொளி வடிவம்: https://youtu.be/6yBZMNK1Occ

You may also like

Leave a Comment