Home 2020 LGBTQ Conference LGBTQ இணைய கருத்தரங்கம்: நாள் 2 – மானுடவியலும் கலாச்சாரமும்

LGBTQ இணைய கருத்தரங்கம்: நாள் 2 – மானுடவியலும் கலாச்சாரமும்

by Malarvizhi Baskaran
0 comment

இரண்டாம் நாள் நிகழ்வு 

இரண்டாம் நாள் நிகழ்வில் முதலில் பேசியவர் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் நிர்வாகவியல் துறைப்பேராசிரியர் செந்தில்குமார் அவர்கள். திருநங்கையர் பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை மக்களிடையே தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பதால் களப்பணி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். உலகளாவிய நிலையில் மாற்றுப்பாலினத்தாரின் நிலை ஒரே மாதிரியாக, உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில்தான் இருக்கிறது. ஜனநாயக ஆட்சியிலும் இந்நிலை மாறவில்லை என்பதைத் தமது ஆய்வுத்தரவுகளோடு விளக்கினார். கல்வி, பொருளாதாரத்தில் கட்டாயம் முன்னேற்றம் தேவை. அதுவே அவர்களை உயர்த்தும் வழிமுறையாகும் என்றார்.

இரண்டாவதாகப் பேசியவர் திருப்பூர் எல். ஆர். ஜி மகளிர் அரசு கலைக் கல்லூரியின் தமிழ்துறைப் பேராசிரியர் அமைதி அரசு அவர்கள். மாற்றுப்பாலினத் தோழமைகளுக்கான சக்தி, திறமை, ஆளுமை, கலைத்தன்மை போன்ற தனித்த வெளிக்கு நாடக உலகம் பேருதவியாக இருக்கிறது என்பதைத் தமது கூத்துப்பட்டறை அனுபவங்கள் வழித் தெளிவாக விளக்கினார்.

மூன்றாவதாகப் பேசியவர் இருபது வருடங்களுக்கும் மேலாக விளிம்புநிலை மக்களிடம் பணியாற்றிவரும் தோழர் கலைமாமணி சுதா அவர்கள். ஒருசில மனிதர்கள் ஓரிரு சமயங்களில் செயலாற்றுவதை மட்டும் வைத்து அவர்களைத் தவறாக எடைபோடக்கூடாது. இது திருநங்கைகளுக்கும் பொருந்தும். எங்களுடனான உங்களது நட்பு, அனுபவம் குறித்தும் அவ்வனுபவம் நல்லதாக இல்லாவிட்டாலும் பேசுங்கள், எழுதுங்கள் என்று கேட்டுக்கொண்டார். தனது சமூகத்திற்கான முன்னேற்றமும் மாற்றமும் இப்பொழுது அதிகமாகத்தான் இருக்கிறது என்று கூறினார்.

திருநங்கையர் கூடுமிடமாகிய ஜமாத், இவர்களது சடங்குகளான தத்தெடுத்தல், தாயாகிய சேலா, பாலூற்றும் திருவிழா, இவர்களது உறவுகளுக்கிடையேயான வலிமை அதாவது இந்தியாவில் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் ஏதாவதொரு திருநங்கையைப் பார்த்தால் போதும் தங்குமிடம், உணவு போன்ற சிக்கல்கள் தீர்ந்துவிடும் என்று பண்பாடு ரீதியிலான தரவுகளைத் தம் உரையாக்கினார்.

குடும்பம் எனும்போது இரண்டு ஏற்கவியலாத, வருந்தத்தக்க நிலை ஏற்பட்டிருப்பதாகக் கூறினார். ஒன்று – திருநங்கையாக மாறியபின் ஒருவரை அவரது குடும்பம் அவர் எவ்வழியில் சம்பாதித்தாலும் பரவாயில்லை என்று அப்பணத்திற்காக மட்டுமே ஏற்கிறது, இரண்டு – குடும்பம் ஏற்பதைப் பெரிதாக நினைக்கும் திருநங்கையரும் சாதி, சமயத்தைப் பின்பற்றத் தொடங்கிவிட்டனர். இன்னும்  மாற்றுப்பாலினத்தவர் தன்னைப் பற்றி அறிந்த பிறகு குடும்பத்திலிருந்து வெளியில் வருவதே சரி என்றும் இல்லையெனில் அக்குடும்பம் அவரைப் பெண்ணாகவே இருத்தி இன்னொரு ஆணுக்குத் திருமணம் செய்வித்து இருவரது வாழ்க்கையையும் பாழாக்கிவிடும் என்றார். மேலும் திருநங்கையைவிடத் திருநம்பியர் வாழ்வு இன்னும் சிக்கலானது, இது குறித்த புரிதலும் தேவை என்றும் பேசியது யதார்த்தத்தை வெளிச்சமிட்டுக் காட்டியதாக இருந்தது.

சிறப்புரையாளர் சுப. வீரபாண்டியன் அவர்கள் இக்கருத்தரங்கில் என்னைப் பேசத்தான் அழைத்தார்கள், ஆனால் இரண்டு நாட்களும் நான் நிறைய கற்றுக்கொண்டேன் என்று திறந்த மனதோடு பேசத் தொடங்கி சமூக மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருப்பதுதான். சமூக உளவியல்தான் சமூகத்தை வழிநடத்துகிறது என்று கூறி அதனை மேட்டிமைத்தனமும் ஒவ்வாமையும், புறக்கணிப்பு, அவமதிப்பு, பரிவு, தோழமை என்கிற ஐந்து நிலைகளில் விளக்கினார். சுதந்திரமும் சுயமரியாதையும்தான் மனிதனுக்கு முதல் தேவை. ஒவ்வொரு மனிதனும் இதுபற்றி நினைக்கும் போதுதான் சமூகம் மாறுகிறது. சமூகத்தில் எதையுமே தரப்படுத்துதல் மற்றும் வரிசைப்படுத்துதலே தவறான ஒன்று என்றதோடு மனித உரிமைகள் குறித்த கருத்துக்களைப் பிடல் காஸ்ட்ரோவில் தொடங்கி சகோதரத்துவம், சமத்துவம், சுதந்திரம் என்கிற புத்தர், அம்பேத்கர் கருத்துக்களுடன் முடித்தார்.

 

அறிக்கை தயாரிப்பு: முனைவர் பாப்பா

நிகழ்ச்சியின் காணொளி வடிவம்: https://youtu.be/ADhyUD5Ceaw

You may also like

Leave a Comment