Home NewsArticles தனிமனிதத் தேவைகளும் தேர்வுகளும் சமுதாயச்சிக்கல்களாவது ஏன்?

தனிமனிதத் தேவைகளும் தேர்வுகளும் சமுதாயச்சிக்கல்களாவது ஏன்?

by Malarvizhi Baskaran
0 comment

த்திரப்பிரதேசம் அலிகரிலுள்ள அலிகர் முஸ்லீம் பல்கலைகழகத்தின் மராத்தி மொழி இணைப்பேராசிரியராக இருந்தவர், ராமச்சந்திர ஸ்ரீநிவாச சிராஸ். மத்திய பல்கலைக்கழகமான இதன் நவீன இந்திய மொழிகள் துறையின் தலைவராகவும் இருந்தவர், பல்கலைகழக வளாகத்திலுள்ள ஆசிரியர் குடியிறுப்புகளில் தங்கியிருந்தார். ஒரு பேராசிரியராக கல்வியால் கிடைக்காத பிரபலம் அவருக்கு  வேறு நடவடிக்கையால் கிடைத்தது.

கடந்த 2010 ஆம் ஆண்டின் துவக்கத்தில் நடைபெற்ற சம்பவம் இது. இங்கு அவ்வருடத்தின் பிப்ரவரி 9 ஆம் தேதி  மாலை ஆறு மணிக்கு சிராஸ், தமது வீட்டில் ஒரு ரிக் ஓட்டுநருடன் ஒருபால் உடலுறவில் ஈடுபட்டிருந்திருக்கிறார். இதை, ‘வாய்ஸ் ஆஃப் நேஷன்(சில வருடங்களில் இது மூடப்பட்டு விட்டது)‘ எனும் இந்தி செய்தி தொலைக்காட்சியின் நிருபர்கள் குழு, ரகசியமாகப் படமாக்கினர். இது மற்ற செய்தி ஊடங்களிலும் வெளியாகி பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து முனைவர்  சிராஸ் பல்கலைகழகத்தின் நடத்தை விதிகளுக்கு முரணாக நடந்து கொண்டதாகக்கூறி மறுநாளே பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த உத்தரவால், பல்கலைகழகத்தின் அரசு குடியிறுப்பையும் காலி செய்து வளாகத்திற்கு வெளியேற வேண்டியிருந்தது. சிராஸின் செயல்களுக்கு ஆதரவாக  ‘நாஜ் பௌண்டேஷன்‘ மற்றும் ‘சஹேலி‘ உட்பட பல அமைப்புகள் குரல் கொடுத்தனர். இவர்களின் உதவியோடு சிராஸ், தம் வீட்டில் அத்து மீறிப் புகுந்து, மிரட்டியதற்காக அந்த இந்தி செய்தி தொலைக்காட்சி மற்றும் அதன் நிருபர்கள் உட்பட ஏழு பேர் மீது அலிகர் காவல்துறையிடம் புகார் அளித்தார்.

ஆனால், அலிகர் காவல்துறையினர் இந்தப் புகாரைப் பதிவு செய்யாமல் கிடப்பில் போட்டு விட்டனர். இதை எதிர்த்து அலிகர் மாவட்ட நீதிமன்றத்தில் அளித்த மனு விசாரணையில் இருந்தது.  எனவே, உபியின் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் எந்த விசாரணையும் இன்றி செய்யப்பட்ட தனது பணியிடைநீக்கத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என மனு அளித்தார். அதை ஏற்ற நீதிமன்றம் பேராசிரியர் சிராஸின் பணியிடைநீக்கத்துக்கான உத்தரவை ரத்து செய்யும்படி மார்ச் 31 ஆம் தேதி பல்கலைகழகத்திற்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் நகலை ஏப்ரல் 5 ஆம் தேதி பல்கலைகழக நிர்வாகத்தினரிடம் அளித்தும் சிராசின் பணியிடைநீக்கம் ரத்து செய்யப்படாமல் இருந்தது. இதன் இரண்டு தினங்களுக்கு பின் ஏப்ரல் 7 ஆம் தேதி அவரது வீட்டில் பிணமாகக் கிடந்தார். உட்பக்கமாக தாழிடப்பட்ட அவரது வீட்டுக் கதவை போலீசார் பொதுமக்கள் முன்பாக உடைத்து திறந்தனர். அவரது உடல் அழுகிய  நிலையில் காணப்பட்டது.  தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழையல்ல எனது சகோதரர் சிராஸ், அவரது மர்மச்சாவை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என அலிகர் காவல்துறையிடம் புகார் அளித்தார் சிராஸின் சகோதரர் சஞ்சீவ். மகராஷ்ட்ராவின் நாக்பூரில் இருந்த சிராஸின் முன்னாள் மனைவி மான்ஸி, உடலை பெற்று அலிகரிலேயே தகனம் செய்தார்.

 மணமான சில மாதங்களிலேயே விவாகரத்து பெற்ற 64 வயது சிராஸ், தனியாகவே வாழ்ந்து வந்தார். பல்கலைகழகத்திலும் அவர் யாருடனும் நெருங்கிய நட்பு வைத்துக் கொள்ளாமல் இருந்தார். அவரது பெற்றோர் மூலமாக நாக்பூரில் கிடைத்த சொத்தின் மதிப்பு சுமார் ஏழு கோடி ரூபாய் என செய்திகள் வெளியாகின. எனவே, அவர் சிக்கிய ஒருபால் சேர்க்கை விவகாரத்தை பயன்படுத்தி சொத்திற்காகவும் சிராஸ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் ஒரு கருத்து நிலவியது. இதற்கிடையே, இறந்து போன சிராசின் பணியிடைநீக்கத்தை ரத்து செய்தப் பல்கலைகழகம், அதன் உத்தரவை நவீன இந்திய மொழிகள் துறைக்கு அனுப்பியது. அது, சிராஸ் உயிருடன் இருந்த 5 ஆம் தேதியிட்டு 8 ஆம் தேதி அனுப்பப்பட்டது. சிராஸ் உயிருடன் இருந்த போது அளித்த மனுவை இறந்த பின் விசாரித்த நீதிமன்றம், நிருபர்கள் உட்பட ஏழு பேர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த போலீசுக்கு உத்தரவிட்டது.

இதன் காரணமாக ஏழு குற்றவாளிகளில் இருவர்  கைதாகி சில தினங்களில் ஜாமீனும் பெற்றனர். இதன்பிறகு, மேலும் ஒரு புதிய திருப்பம் சிராஸ் வழக்கில் ஏற்பட்டது. அதுவரையும் எந்த கருத்தும் சொல்லாமல் காணாமல் போயிருந்த 35 வயது ரிக்ஷா ஓட்டுநர் திடீர் என போலீசார் முன் ஆஜரானார்.   ‘நான் ஒரு ‘புற்று நோய்’ நோயாளி. இத்துடன் எனது குடும்ப பாரத்தை ரிக்ஷா ஓட்டி காப்பாற்றி வந்த போது பேராசிரியர் சிராஸை சந்திக்க நேர்ந்தது. பிறகு எனது வண்டியிலேயே அன்றாடம் சவாரி செய்தவர், என்னை ஒருபால் சேர்க்கைக்கு அழைத்தார். நான் மறுத்தமைக்கு, என் மீது திருட்டு குற்றம் சுமத்தி போலீசில் பிடித்து கொடுத்து விடுவதாக மிரட்டினார். இதனால், பலவந்தமாக நான் அவருடன் கடந்த ஆறு மாதங்களாக ஒருபால் சேர்க்கையில் ஈடுபட வேண்டியதாயிற்று. இவரிடமிருந்து விடுதலை பெற வேண்டி நான்தான் மீடியாவிற்கு போன் செய்து தகவல் கொடுத்தேன். இதன் பேரில்தான் அவர்கள் சம்பவம் நடந்த பிப்ரவரி 9 ஆம் வீட்டில் நுழைந்து ஸ்டிங் ஆப்ரேஷன் செய்தனர்.‘ என்றவர் இன்றும் அலிகரில் ரிக்‌ஷா ஓட் டுகிறார்.

   இந்நிலையில், இதை அந்த ரிக்ஷாக்காரன் சிராஸ் உயிருடன் இருக்கும் போது ஏன் கூற முன்வரவில்லை? என சர்ச்சைகள் கிளம்பின. மனித உரிமை இயக்கங்கள் உட்பட பல்வேறு சமூக அமைப்புகளும் டெல்லியில் கூடி சிராஸின் வழக்கில் நீதி கிடைக்கப் போராடுவதாக அறிவித்திருந்தனர். எனினும், இந்த வழக்கில் எந்த முடிவும் இன்றி, இன்றுவரை நிலுவை பட்டியலில் காத்திருக்கிறது.

பாலியல் நாட்டம் என்பது தனிமனித உரிமை சார்ந்தது என்ற புரிதலற்ற சமுதாயமாகவே பெரும்பாலும் நாம் இருக்கிறோம். அறிவைப்புகட்டிய ஒரு பேராசிரியரின் வாழ்க்கையில், ஒரு ஊடகம் செய்த ‘ஸ்டிங் ஆப்ரேஷன்‘ அவரது உயிர் போக காரணமானது.

எப்போது இத்தகைய கற்பிதங்களில் இருந்து வெளிவரப்போகிறோம். பாலியல் நாட்டம் மற்றும் பாலீர்ப்பு குறித்த கருத்துகளை எப்போது திறந்தமனதோடு அணுகப்போகிறோம்.

நம் சக மனிதர்களை அவர்களின் தேர்வுகளுக்குச் சரியான மதிப்பளித்து மரியாதையுடன் அவர்கள் அணுக வேண்டியது சமுதாயத்தின் கடமையே. தோள் கொடுப்போம். தோழமை பாராட்டுவோம்.

கட்டுரையாக்கம்: எஸ். சாந்தினிபீ ஷபிமுன்னா

பதிப்பாக்கம்: மலர்விழி பாஸ்கரன்.

 18-10-2020

You may also like

Leave a Comment