முனைவர். கற்பகவள்ளி

தோழர். ஷீத்தல்
சங்கம நிறுவனத்தின் துணைத்தலைவரும் கேரளாவின் மாநில திருநர் நலவாரியத்தின் உறுப்பினரும் திஷா நிறுவனத்தின் தன்னார்வலருமான தோழர் ஷீத்தல் நாடகம், நடனம் போன்ற நிகழ்த்துக்கலைகளின் வாயிலாக மாற்றுப்பாலினம் மற்றும் பாலின ஈர்ப்பு கொண்டோரின் குரலாக தன்னை முன்னிறுத்தி அவர்களின் நல்வாழ்வுக்காக தொடர்ந்து செயலாற்றி வருகிறார்.
இவரது சமூக செயல்பாடுகளுக்காக 2015இன் கேரள் அரசின் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
தோழர். ஸ்ரீஜித் சுந்தரம்
நடனக்கலைஞர், நாடகக்கலைஞர், நடிகர் என்று பல்வேறு பரிணாமங்களில் பரிமளிக்கும் நிகழ்த்துக்கலைஞர் ஸ்ரீஜித் சுந்தரம் அவர்கள் கட்டியக்காரி நாடகக்குழுவின் தோற்றுநர்களுள் ஒருவராவார்.சாதிய, வர்க்க பாலின ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலாக கட்டியக்காரி நாடகக்குழு செயலாற்றி வருகிறது.
’மொளகாப்பொடி’, மஞ்சள், குடியிருப்பு பறையான் மறந்த கதைகள் போன்ற மேடை நாடகங்கள் மூலம் இவர் பாலின வேறுபாடுகளால் ஒடுக்கப்படும் மக்களின் நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். தொடர்ந்து மாற்றுப்பாலினம் மற்றும் பாலீர்ப்புச் சமூகத்தினரின் மேம்பாட்டுக்காக செயலாற்றி வருகிறார்.
முனைவர். கட்டளை கைலாசம்
பேரா.முனைவர். கட்டளை கைலாசம் மதுரைத் திரவியம் தாயுமானவர் இந்துக்கல்லூரி, திருநெல்வேலியில் தமிழ்த்துறைத்தலைவராகப் பணியாற்றிப் பணி நிறைவு பெற்றவர். 30 ஆண்டுகளாக ஓலைச்சுவடி சேகரிப்பு மற்றும் பாதுகாப்பில் ஈடுபட்டுவருகிறார்.
இந்தியமொழிகளும் இலக்கியங்களும் மற்றும் இசக்கியமன்ன உள்ளிட்ட நான்கு நூல்களும் என்பதிற்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியிருக்கிறார்.
Dr. Alf Hiltebeitel என்ற மானுடவியல் ஆய்வாளருடன் இணைந்து ‘அரவான் வழிபாடு’ குறித்த கள ஆய்வு செய்து கட்டுரை எழுதியிருக்கிறார்.
முனைவர். செந்தில்குமார்
அழகப்பா பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொதுநிர்வாகத்துறை உதவிப்பேராசிரியராகப் பணிபுரிகிறார். இருபதுக்கும் மேற்பட்ட இவரது ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு ஆய்விதழ்களில் வெளிவந்திருக்கின்றன. காட்சி ஊடகங்களிலும் கல்வி குறித்த நிகழ்ச்சிகளில் பங்களித்திருக்கிறார்.
ஜா. அமைதி அரசு
திருப்பூர் எல்.ஆர்.ஜி மகளிர் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியராக இருக்கும் ஜா. அமைதி அரசு அவர்கள். பல ஆண்டுகளாக திருநர்கள் விழிப்புணர்வுக்கான செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்தி வருபவர். தெருக்கூத்துக் கலைஞர்கள் குறித்த ஆய்வுகள் செய்துவருபவர்.
கலைமாமணி சுதா
Indian Transgenders Initiative நிறுவனத்தின் தோற்றுநர் தலைவர் கலைமாமணி சுதா அவர்கள் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக திருநர் சமூகத்தின் மேன்மைக்காக செயலாற்றி வருகிறார்.
பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்ததோடு பல தொண்டு நிறுவனங்களோடு இணைந்தும் இந்தியாவில் திருநர் மேம்பாட்டுக்காக செயல்படும் நிறுவனங்களில் உறுப்பினராக இருந்தும் பலதளங்களில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
இவரது சேவைகளைப் பாராட்டி அமெரிக்கத்தமிழ் பல்கலைக்கழகமும் புனித சேவியர் கல்லூரியும் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியிருக்கின்றன.
தோழர். ஏஞ்சல் குயின்ரஸ்
இலங்கையைச்சேர்ந்த ஏஞ்சல் குயின்ரஸ் யாழ் மாவட்டத்தின் Transgender Networkஇன் நிறுவனராவார். தொடர்ந்து LGBTIQ+ சமூகத்தின் மேன்மைக்காகக் குரல்கொடுத்துவரும் செயல்பாட்டாளர்.
தோழர். சம்யுக்தா விஜயன்
தொழில், தொழில் நுட்பம், கலை என்ற பலதுறைகளில் சிறந்து விளங்கும் தோழர் சம்யுக்தா விஜயன் அமெரிக்காவின் அமேசானில் தொழில்நுட்பத்துறையில் பத்து ஆண்டுகளாக பணியாற்றியிருக்கிறார். தற்போது தென்கொரியாவில் பணியாற்றுகிறார்.
தொண்டு நிறுவனங்களோடு இணைந்தும் தனித்தும் திருநர்கள் தகவல் தொழில்நுட்பத்துறையிலும் கார்ப்ரேட் நிறுவனங்களிலும் பணியில் சேர உதவி வருகிறார். இது குறித்தான பயிற்சிகளையும் உரைகளையும் தொடர்ந்து நிகழ்த்திவருகிறார்.
தோழர். மாலினி ஜீவரத்தினம்
மாலினி ஜீவரத்தினம் LGBTQ சமூகத்தினருக்காகப் பாடுபடும் சமூக செயல்பாட்டாளர்.இவர் திரைப்பட இயக்குநருமாவார். மெட்ராஸ் அருவி உள்ளிட்ட திரைப்படங்களில் பணியாற்றியபின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘லேடிஸ் அண்ட் ஜெண்டில்வுமன்’ என்ற இவரது திரைப்படம் வெளியானது.இதுவே தமிழின் முதல் லெஸ்பியன் ஆவணப்படமாகும்.
இது 9 சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு 3 விருதுகளையும் பெற்றது. தொடர்ந்து மாற்றுப்பாலினம் மற்றும் பாலீர்ப்பு கொண்டோர் நலனுக்காகத் தன் உழைப்பை ஈந்து வருகிறார் மாலினி.
வழக்கறிஞர். கௌதம சன்னா
கெளதம சன்னா – அம்பேத்கரியம் மற்றும் மார்க்சியம் அடிப்படையில் இயங்கிவரும் கருத்தியலாளர் மற்றும் எழுத்தாளர். பல இதழ்களில் ஏராளமான கட்டுரைகளையும் பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதியும் தொகுத்தும் இருக்கிறார். 1999ல் தலித் மாணவ மாணவியர் கூட்டமைப்பு (bS=) மற்றும் அனைத்துக் கல்லூரி மாணவ மாணவியர் கூட்டமைப்பு AKMK), 2003ல் தலித் எழுத்தளார்கள் மற்றும் கலைஞர் பேரவை நிறுவன உறுப்பினராகவும், அதன் பொருளாளராகவும் இருந்ததுடன் தலித் நிலவுரிமை இயக்கத்தின் செயலாளராவும் செயல்பட்டார்.
2005ல் பௌத்த இளையோர் கழகத்தினை உருவாக்கினார் (vBA). 2012ல் சமூக அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கத்தினை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தார். 2019ல் தலித் உரையாடல் அவையினைத் (DCF) தொடங்கி விவாதங்களை உருவாக்கி வருகிறார். 2008 முதல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொள்கைப்பரப்பு செயலாளராக பணியாற்றியதுடன், 2015 முதல் அதன் துணைப் பொதுச் செயலாளராகவும் செயலாற்றி வருகிறார்