Home 2020 LGBTQ Conference LGBTQ இணையவழிக் கருத்தரங்கம் : நாள் 1 – கலையும் வரலாறும்

LGBTQ இணையவழிக் கருத்தரங்கம் : நாள் 1 – கலையும் வரலாறும்

by Malarvizhi Baskaran
0 comment

2020 அக்டோபர் 30, 31 மற்றும் நவம்பர் 1 ஆகிய மூன்று நாட்கள் இக்கருத்தரங்கம் கலையும் வரலாறும், பண்பாடும் மானுடவியலும் மற்றும் சமூகச்சிக்கல்களும் சாதனைகளும் என மூன்று தலைப்புகளில் நடைபெற்றது. இதில் மொத்தம் ஒன்பது கருத்துரைகளும் மூன்று சிறப்புரைகளும் நிகழ்த்தப்பெற்றன.

மூன்று நாட்களும் கருத்தரங்க நிகழ்வுகளைத் தோழர் ஆனந்தி, முனைவர் பாப்பா, தோழர் மலர்விழி ஆகியோர் நெறியாள்கை செய்தனர். தோழர் மலர்விழி, முனைவர் சாந்தினிபீ, தோழர் தேமொழி ஆகியோர் வரவேற்புரை வழங்கினர்.

தமிழ் மரபு அறக்கட்டளை நிறுவனர் முனைவர் சுபாஷிணி மூன்று நாட்களும் நோக்கவுரையாற்றினார். சமூகத்தில் தொடர்ந்து பேசப்படாத, புறக்கணிக்கப்பட்டு வருகிற மனிதர்கள் பற்றிப் பேசுவதற்கான தளத்தினை உருவாக்கும் நோக்கத்தில் இக்கருத்தரங்கு நடத்தப்படுவதாகக்  கூறினார். வரலாறு, இலக்கியம், வழிபாடு, கூவாகம் திருவிழா, தொல்லியல் மற்றும் பாரதக்கதை சொல்லும் மரபு போன்ற நிலைகளில் மாற்றுப்பாலினம் பற்றிய செய்திகள் காலந்தோறும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.  1948இல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் சாசனம் மனிதர்கள் அனைவரும் சமம் என்று வெளியிட்டது. 2014இல் அவர்கள் வெளியிட்ட அறிக்கை தமிழில் உள்ளது. இவர்களுக்கெனத் தனிச்சட்டம் இயற்றப்பட்டு அது பதினான்கு மொழிகளில் வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழில் மொழிபெயர்ப்பு செய்யும் பணியைத் தமிழ் மரபு அறக்கட்டளை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார். மாற்றுப்பாலினம் பற்றிய விழிப்புணர்வு உருவாவதற்குப் பள்ளிக்கூடச் சூழலில் மாற்றம் வேண்டும். அதற்கு ஆசிரியர்களுக்கு நாம் உதவவேண்டும். ஐரோப்பா, அமெரிக்கா போன்ற உலக நாடுகளில் வெளிப்படையாகத் தம்மை மாற்றுப்பாலினம் என்று வெளிப்படுத்திக்கொண்டு இவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதைப் போல நமது சூழலிலும் மாற்றுச்சிந்தனை தேவை என்று கூறியதோடு உலகளாவிய நிலையில் மாற்றுப்பாலினச் சாதனையாளர்களைப் பட்டியலிட்டார்.

மூன்று நாட்களும் நோக்கவுரையைத் தொடர்ந்து பங்கேற்பாளர்களின் புரிதலுக்காக LGBT குறித்த காணொலி ஒன்று திரையிடப்பட்டது.

மூன்று நாட்களும் நடைபெற்ற கலந்துரையாடல் பங்கேற்பாளர்களிடையே டுபுடீவு குறித்ததொரு நல்ல புரிதலையும் இதுகுறித்துப் பரந்துபட்ட மனதுடன் வெளிப்படையான பேச்சுக்கும் வழி செய்தது.

முதல் நாள் நிகழ்வு

முதல் கருத்துரை ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியின் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் முனைவர் கற்பகவள்ளி அவர்களுடையது. மீவியல்பு கொண்டவர்கள் என்று தோழர்களைக் கூறுவதில் பெருமையடைகிறேன் என்று மகிழ்வுடன் கூறினார். அலெக்சாண்டர் இவர்களுக்கு அதிக சக்தி இருப்பதாக எண்ணித் தமது ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் வாய்ப்புக் கொடுத்தது, மாலிக்கபூர், அலாவுதீனுக்குமிடையிலான நட்பு போன்ற வரலாற்றுச் செய்திகளையும் மகாபாரதம், சீவக சிந்தாமணி ஆகிய இலக்கியங்களிலிருந்து சான்றுகளையும் எடுத்துரைத்தார். இவர்களுக்கான அனைத்து வாய்ப்புகளும் இந்தியாவில் குறைவு என்றாலும் தமிழகத்தில்தான் முதன்முதலில் (2008) மாற்றுப்பாலினத்தவர்  நலவாரியம் தொடங்கப்பட்டதையும் இவர்களுக்கென தனிக்குடும்ப அட்டை, கடனுதவி, மருத்துவக்காப்பீடு, வேலைவாய்ப்புப்பயிற்சி, அரசு மருத்துவ மனைகளில் இலவசமாகப் பாலின அறுவை சிகிச்சை, கல்வி நிலையங்களில் கல்வி கற்பதற்கு அனுமதி போன்றவை வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

சமூகத்தில் மனிதராக இவர்களுக்கு மரியாதை தரவேண்டும், அவர்களது குறைகளை முதலில் கேட்கவேண்டும், இவர்கள் சமூகச்செயல்பாடுகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்க வேண்டும், பள்ளிகளிலேயே இது பற்றிய ஆரம்ப விழிப்புணர்வுக் கல்வியைக் கொடுத்தோமானால் இவ்வயதில் இத்தோழமைகளுக்கு ஏற்படும் உடலியல் ரீதியான மாற்றங்களை மற்றவர்கள் புரிந்து கொள்வதற்கு உதவியாக அமையும் அதை நாம் செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இரண்டாவதாக, சங்கம நிறுவனத்தின் துணைத்தலைவர், சமூகச் செயல்பாட்டுக்கான கேரள அரசின் விருது (2012) பெற்றவர், எழுத்தாளர் தோழர் ஷீத்தல். தமிழகத்தில் எங்களை மனிதராகப் பார்க்கிற மனது இருக்கிறது. கேரளத்தில் அது இல்லை, இப்பொழுதுதான் பெண்கள் எங்களைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று தனது உரையைத் தொடங்கினார். மூன்றாம் பாலினம் என்று ஏன் எங்களைச் சொல்ல வேண்டும். முதல், இரண்டு, மூன்று என்று இடங்களை வரையறை செய்தது யார்? அதற்கான அடிப்படை எது?  ஆண், பெண் இருவரது குணங்களும் கொண்ட நாங்களே முதலிடம் என்கிற கேள்வி, கருத்து இரண்டினையும் முன்வைத்தார்.

சமூகம் மற்றும் சட்டரீதியில் இவர்களுக்குக் கிடைத்த அங்கீகாரத்தை எடுத்துரைத்தார். இவர்களும் மனிதர்களே, சமூகத்தில் அனைத்து உரிமைகளும் இவர்களுக்கு உண்டு என்று 2014 ஆம் ஆண்டில் கேரளாவில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது, இவ்வாண்டில் மாற்றுப்பாலினம் குறித்த கணக்கீடு ஒன்றைத் தான் செய்தது, ‘ரெயின்போ’ என்கிற பெயரில் அரசுடன் இணைந்து ஆய்வுத்திட்டம் தொடங்கி இத்தோழமைகளுக்காகப் போராடுவது பற்றியும் பேசினார்.

முதலில் ஆண்களுக்கு, பிள்ளைகளுக்கு இது குறித்துக் கற்றுத்தருதல் வேண்டும். நான் எப்படி வாழ வேண்டும், எனது ஆசை, கனவுக்கேற்ற வகையில் நான் வாழ வேண்டும் என்றும் எங்குமே எங்களுக்கான இடம் இல்லை. பிரச்சனைகள்தான். நாங்கள் போராடுகிறோம். நீங்களும் எங்களுடன் சேருங்கள். எங்களுக்காகப் பேசுங்கள் என்றும் கூறினார். தன்னம்பிக்கையுடன் கூடிய இவரது உரை  நமக்கும் உற்சாகத்தைத் தந்தது.

இதையடுத்து கேரளத் திருநங்கையர் பற்றித் தோழர் ஸ்ரீஜித் சுந்தரம் தயாரித்த ‘பறையான் மறந்த கதை’ நாடகக் காணொலி திரையிடப்பட்டது. இந்நாடகத்தில் வாழ்க்கைதான் துயரமானது, இறப்பும் துயரமா? என்று இறந்துபோன உடல்களின் ஆவிகள் கேட்பதாக இறுதிக்காட்சி அமைத்திருப்பதையும் சமீபத்தில் சென்னையில் தோழர் சங்கீதா கொடுமையாகக் கொல்லப்பட்டது குறித்தும் பேசினார்.

சமூகத்தில் தங்களைப் பற்றிய தரவுகள் கலைவழியே சொல்லப்பட்டதாகத்தான் இருக்கின்றனவே தவிர களப்பணி வழியானதாகவோ, நேரடி அனுபவங்கள் வாயிலானதாகவோ இல்லை என்றார். பதினைந்து வருடங்களாகத் தான் நடத்திவரும் ‘கட்டியக்காரி’ நாடக அமைப்பின்வழி நடத்தப்பெற்ற மிளகாய்ப்பொடி, அவமானம், பறையான் மறந்த கதை போன்ற நாடகங்களின் உருவாக்கம், பின்னணி, இதற்குப் பேரா. மங்கையின் மிகுந்த ஆதரவு கிடைத்தது பற்றியும் எடுத்துரைத்ததோடு தங்கள் வாழ்க்கையில் கலை முக்கியமான பணியைச் செய்து வருவதாகவும் அதேநேரம் நாடகக்கலையில் பங்கேற்கும் தோழமைகள் கூட வெளிப்படையான பகிர்தலை வைத்துக் கொள்ள முடியாத அளவிற்கு இச்சமூகத்தின் புரிதல் உள்ளது என்றும் கூறினார். கட்டியக்காரி என்கிற தனது நாடக அமைப்பின் பெயரை விளக்கும் பொழுது நாட்டில் திருத்தங்கள்தான் அதிகம், நாங்கள் பேசுவதை, எங்கள் வலிகளை யாரும் கேட்கமாட்டார்கள் என்றும் வருந்தினார். மதுரையில் தோழர் ப்ரியா பாபுவால் தொடங்கப்பட்டிருக்கிற திருநங்கைகளுக்கான ஆய்வு மையத்தினைக் கல்;லூரி மாணவர்கள் அதிகம் பயன்படுத்துவது வரவேற்கத்தக்க ஒன்று. நாடகக்கலைவழி திருநங்கைகள் வாழ்வியலைச் சமூகத்திற்குப் பறைசாற்றும் இவரது உரை கேட்பவர் மனதைக் கனக்கச் செய்தது.

இன்றைய சிறப்புரையாளர் முனைவர் கட்டளை கைலாசம் தமது இளவயதுப் பருவத்திலும் இத்தோழமை பற்றிய அறிதலும் பகிர்தலுக்குமான வாய்ப்பு இல்லை என்று தனது உரையைத்  தொடங்கினார். 1992 ஆம் ஆண்டு பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி, நாட்டார் வழக்காற்றியல் மையத்தில் திரௌபதி வழிபாடு பற்றி விரிவான ஆய்வு செய்த ஆல்ஃப் ஹில்டபெடல் என்பவரது தொடர் சொற்பொழிவுகள் பற்றிக் கூறினார். நவம்பர் 1ஆம் தேதி திருநங்கையருக்கான மின்னிதழ் மதுரையில் ப்ரியா பாபு அவர்களால் தொடங்கப்படவிருப்பதையும் தெரியப்படுத்தினார். திருநங்கைகள் பற்றிய  இலக்கியத்தரவுகளை மிகுதியாகப் பகிர்ந்து கொண்டார். ஆந்திராவின் ஹைதராபாத்தில் தொடங்கி தென்மாவட்டங்கள் வரையிலான திருநங்கையரின் தோற்றக்கதைகள் பற்றியும் கூவாகம் திருவிழா, வடஇந்தியாவில் வாழும் இவர்களது பிரிவுகள், மொழி, உறவுமுறைகள் இவர்களது நூல்கள், இவர்களைப் பற்றிய நூல்கள் குறித்தும் விளக்கமாகக் கூறியதோடு இது குறித்த ஆழமான ஆய்வு தேவை, இன்னும் நாம் இவர்களை முதலில் ஏற்றுக் கொள்ளவேண்டும். குடும்பம் பள்ளி, சமூகம் என அனைவரும் ஏற்பதோடு இவர்களை நேசிப்பதே நமது கடமை என்றும் தனது உரையை முடித்துக் கொண்டார்.

அறிக்கை தயாரிப்பு: முனைவர். பாப்பா

நிகழ்ச்சியின் காணொளி வடிவம்: https://youtu.be/IdftHixA2iI

You may also like

Leave a Comment