Home 2020 Women Conference நாள் 5: முந்நீர் மகடூஉ

நாள் 5: முந்நீர் மகடூஉ

by Malarvizhi Baskaran
0 comment

முந்நீர் மகடூஉ (12-08-2020)

கடல் தாண்டித் தடம் பதித்த பெண்கள் எதிர் கொள்ளும் சிக்கல்கள் குறித்து வெளிநாடுகள், மாநிலத்தில் வாழ்ந்து வரும் பெண்கள் ஏழுபேரும், சிறப்புச் செய்ய ஒருவருமாக ஐந்தாம் நாள் நிகழ்வு செல்வி ப்ரீத்தியின் வரவேற்புரையுடன் தொடங்கியது. இன்றைய நிகழ்வு எழுத்தாளர் மலர்விழி பாஸ்கரனின் நேர்த்தியான நெறியாளுகையுடன் நடைபெற்றது.

தமிழ் மரபு அறக்கட்டளை நிறுவனர் சுபாஷிணி அவர்கள் ஊரடங்கு நேரத்தில் தமது நிறுவனம் நடத்திய, இனி நடத்தப்போகிற நிகழ்வுகள், செயல்பாடுகள் பற்றியும் இன்றும் பெண்கள் இரண்டாம் தரத்திலேயே மதிக்கப்படுகிறார்கள், ஆண், பெண் சமம் என்பதே போலித்தனமானது, பெண்களின் ஆரோக்கியமான உணவு, தானாக முடிவெடுத்தல், பொருளாதாரச் சுதந்திரம் போன்றவை நிறைந்த சமூகமே முன்னேற்றமான சமூகம் என்றும் தமது நோக்கவுரையில் கூறினார்.

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் வழக்கறிஞர் சந்திரிகா சுப்ரமணியம் புலம்பெயர் பெண்கள் சந்திக்கும் சிக்கல்களைக் கலாச்சாரம், கல்வி, வேலை, குடும்பம், மொழி, பொதுவெளியாகிய சமூகம் ஆகிய நிலைகளில் விளக்கினார். நமது மற்றும் புலம்பெயர் கலாச்சாரம் ஆகிய இரண்டையும் கடைப்பிடித்தல், சொந்த நாட்டில் கற்ற கல்வியின் மதிப்பீடு, மீண்டும் படித்தல், அனைத்து வேலைகளையும் தாமே செய்வதால் ஏற்படும் மன அழுத்தம், விளைவாகக் குடும்பப் பிரச்சனை, புலம் பெயர் நாட்டின் சட்டங்களை அறிய வேண்டிய கட்டாயம், பாலியல் துன்புறுத்தல் அனைத்திற்கும் மேலாக அந்நாட்டுச் சொந்தக்காரர் நம்மை நடத்தும் விதம் என்று விரிவாக எடுத்துரைத்தார். நேர நிர்வாகம் தானாகவே வந்துவிடும் என்றும் கூறினார்.

அமெரிக்காவில் Reaction Team என்கிற அமைப்பின் மூலம் சமூகத் தொண்டாற்றி வரும் திருமிகு ப்ரவீணா அவர்கள் புலம்பெயர் பெண்களின் பொருளாதாரம் பற்றிப் பேசும்போது திருமணமாகி இங்கு வரும் படித்த / படிக்காத பெண்கள் கணவனைச் சார்ந்தவர்களாகவும் வீட்டு வேலைகளைப் பார்ப்பதே போதும் என்றும் நினைக்கிறார்கள். பணியிலிருந்தாலும் தமது மற்றும் கணவரது வங்கிக்கணக்கு, சொத்து, பொருளாதாரம் பற்றிய சிந்தனை இல்லாமலும் இருக்கிறார்கள். ஆணை வீட்டுச் சார்புடையவனாகவும் பெண்ணைப் பொருளாதாரச் சார்புடையவளாகவும் வளர்க்கவேண்டும். பெண் கல்வியினால் பயனொன்றுமில்லை, அக்காலத்தில் பாட்டிமார் தம் அஞ்சறைப் பெட்டியில் பணம் சேர்த்து வைத்த புத்திசாலித்தனம் கூட இன்றைய படித்த பெண்களிடத்தில் இல்லை, அசாதாரணச் சூழலில் கையற்று நிற்கும் பெண்களே அதிகம். இந்நிலை மாறவேண்டும் என்பதைத் தம் அனுபவத்தின்வழி எடுத்துரைத்தார்.

ஐரோப்பாவில் பெண்களுக்கான வாய்ப்புகள் பற்றிப் பேசிய ஜெர்மனியின் செல்வி கார்த்திகா அவர்கள் கலாச்சாரங்கள் கலந்த சமூகம் இது, அந்நிய தேசம் என்பதால் பெரியவர்கள் இளையோரை வெளியில் அனுப்ப யோசிக்கிறார்கள், அவர்கள் நம்பிக்கையோடு எங்களை வெளியில் அனுப்புவதற்கு ஏற்ற வகையில் திடமான மனதோடு அந்நியச் சவால்களை எதிர்த்து நிற்கும் மனத்தோடும் தமிழ்ப் பெண்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்யவேண்டும் என்கிற முயற்சியில் இருப்பதாகக் கூறினார்.

மலேசியாவில் ஆசிரியர் பணியிலிருக்கும் திருமிகு சரஸ்வதி ஜகதீசன் அவர்களின் மலேசியாவில் பெண் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த உரை ஆய்வாகவே இருந்தது. இங்கு B40 குழுவினர்தான் அதிகம் சவால்களை எதிர்கொள்பவர்கள். இதற்குப் பொருளாதாரத்தில் பின்தங்கிய இவர்கள் கல்வி பயிலுதல், வீட்டுப்பாடம் செய்வதில் சிக்கல், சின்னத்திரை மோகம் அதிகம், தாய்மார்கள் தங்கள் பெண் பிள்ளைகளைச் திரைப்பட நடிகர் போலக் காட்டுவதால் மனப்பிறழ்வு, உருவம், நிறம், மொழி என்கிற வகையில் மற்றவர்களோடு ஈடுகொடுக்க முடியாமல் மனப்பிறழ்வு, வெளியிலுள்ள படிப்பைக் கைவிட்ட ஆண்களால் தடம் மாறுதல், மதுப்பழக்கத்திற்கு உள்ளாதல் போன்ற காரணங்களைச் சுட்டியதோடு மலேசியப் பெண்கள் சவால்களை எதிர்கொள்வதில் சிறப்பாகச் செயல்படுவதாகவும் கூறினார்.

சிங்கப்பூர்ச் சூழலில் சமூகத் தொண்டாற்றுதல் குறித்துப் பேசிய திருமிகு வசந்தி அவர்கள் பெண்களுக்குப் பாதுகாப்பான நாடு இது என்பதால் தனது பெற்றோர் தனக்கு அனுமதி அளித்ததாகக் கூறிய இவர் சமூகத் தொண்டாற்றுவது தனியாகவா, அமைப்புடன் சேர்ந்ததா, தொண்டாற்றக்கூடிய துறையைத் தேர்தல், அத்துறையறிவு பெறுதல், தொண்டு அமைப்புகளின் சட்டதிட்டங்களை அறிதல், அந்நிறுவனங்களின் பயிற்சிக்குட்படுதல், தமது பாதுகாப்பு, பொருள், நேரம் செலவிடல், திறன் போன்ற உதவிகளை முடிவு செய்தல் ஆகிய வழிமுறைகளையும் இத்தகைய தொண்டுகளின் மூலம் நேர மேலாண்மை, புத்தாக்கச்சிந்தனை, திட்டமிடல், ஒருங்கிணைப்பு போன்ற திறன்களைத் தான் கற்றதையும் நெஞ்சுரம், உறுதி, நன்றியுணர்வு, தோல்வி கண்டு துவளாமை போன்ற குணங்களைப் பெற்றதையும் கூறியதோடு ஒவ்வொருவரும் இன்னொருவர் வாழ்வில் தன்னால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று உறுதியாக நம்புகிறோம் என்றும் முடித்தார்.

உத்திரப் பிரதேசம் அலிகார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் சாந்தினிபீ அவர்கள் உத்தரப்பிரதேச படித்த பெண்கள் பற்றிப் பேசினார். சாதி, மதம், நிறம், ஊர் பற்றிய விவரங்களெல்லாம் தெரியாமல் இவர்கள் பேசுவதேயில்லை. கலப்புத் திருமணத்தை இன்றும் வியப்பாகத்தான் பார்க்கிறார்கள். பெண்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரம் இல்லை, அரசியல் பேசும் பெண்களோடு பேசுவதும் பழகுவதும் தப்பு என்று ஆண்கள் கருதுவது, ஆணின் முன்னேற்றத்திற்குப் பெண்ணின் பழக்கவழக்கங்கள் தடையாக இருப்பதாகச் சாடுவது போன்ற தமது கருத்துக்களை எடுத்துரைத்தார்.

பப்புவா நியூ கினியாவிலிருந்து பேசிய சுபா அபர்ணா சசீந்திரன் அவர்கள் வரலாற்றுப்படையில் உலக அளவில் சாதனைப் பெண்கள் பற்றிப் பேசினார். பெண்களின் பயம் மிகப்பெரிய வைரஸ், பெண்கள் தடைக்கற்களை மட்டும் பார்க்காமல் வெற்றியை, சாதனைகளை மட்டுமே பார்க்கவேண்டும், தம் தனித்துவத்தைக் கண்டுபிடித்து அதை வளர்த்தெடுக்கவேண்டும், பப்பு கினியாவில் பெண்கள் முழுப் பொருளாதாரச் சுதந்திரம் பெற்றவர்களாக இருக்கிறார்கள், பெண்கள் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும், பெண்கள் இயல்பிலேயே தன்னாற்றல் மிக்கவர்கள், அதை வளர்க்க வேண்டும் என்று கூறுவதே தப்பு, உந்து சக்தி உள்ளே இருக்கிறது அதை வெளியே தேட அவசியமில்லை என்று முடித்தார்.

எல்லாவற்றிற்கும் தாய் பெண் மட்டுமே என்கிற மூதாதையரின் பாடல் வரிகளோடு தனது உரையைத் தொடங்கிய இன்றைய நிகழ்வின் சிறப்புரையாளர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் அரிஸ்டாட்டில் பெண்கள் குறித்துக் கீழான கண்ணோட்டம் கொண்டவர் என்றும் இந்த நூற்றாண்டில்தான் பெண்கள் சாதனை படைத்ததாகக் கூறப்படுகிறது, வரலாற்றைப் பார்த்தால் உலகளவில் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பண்டைக்காலத்திலிருந்தே சாதனை படைத்திருப்பதையும் பட்டியலிட்டுக் காட்டினார்.
பெண்கள் பற்றிய பொய்யான கருத்தாக்கங்கள் இந்த நூற்றாண்டில்தான் அதிகம். தமிழ் இலக்கியங்களில் பெண்கள் வேள்விகளில் கலந்து கொண்டமைக்கான குறிப்பு இருப்பதையும் வாழ்க்கைத் துணைநலம் என்கிற அதிகாரத்தை எடுத்துவிட்டே திருக்குறளைப் பாடமாக வைக்கவேண்டும் என்று பெரியார் கூறியதையும் சுட்டிக்காட்டிய அவர் பகுத்தறிவு அறிவுசார் சமூகத்திற்குத் தேவை, கல்வி மட்டுமே நமக்கான அடையாளமல்ல, வாழ்க்கை அனுபவம் மிக அவசியம், அதிகாரத்திற்கு முன்பாகப் பெண்கள் தைரியமாகப் பேசுவது முக்கியம் என்றும் கூறினார். உலகம் அனைவருக்குமானது என்கிற புரிதலோடு செயல்படுவோம் என்று முடித்தார்.

 

அறிக்கை தயாரிப்பு : முனைவர் பாப்பா

You may also like

Leave a Comment