Home 2020 Women Conference நாள் 4: தளை தகர்ப்போம்

நாள் 4: தளை தகர்ப்போம்

by Malarvizhi Baskaran
0 comment

தளை தகர்ப்போம் (12-07-2020)

பெண்களுக்கெதிரான வன்முறை பற்றிய நான்காம் நாள் கருத்தரங்கு எழுத்தாளர் மலர்விழி அவர்களின் நெறியாளுகையில் தமிழ் மரபு அறக்கட்டளையின் செயலர் முனைவர் தேமொழியின் வரவேற்புரையுடன் தொடங்கியது.

கடந்த சில நாட்களாகப் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதை ஊடகங்கள் வாயிலாகப் பார்க்கிறோம். ஊரடங்கு நேரத்தில் குடும்ப வன்முறைகள் அதிகமாகியுள்ளன. ஆகவே பெண்கள் தங்களுக்கெதிரான பிரச்சனைகளை மனம் மற்றும் சட்ட ரீதியாக எதிர்கொள்வதற்கு வழிமுறைகளை அமைத்துத் தரும் வகையில் இன்றைய அமர்வுகள் நடத்தப்படவேண்டும் என்கிற தமது அவாவை நோக்கவுரையாகத் தலைவர் சுபாஷிணி வைத்தார்.

உளவியல் மருத்துவ நிபுணரும் சமூக ஆர்வலருமான ஷாலினி அவர்கள் உள அடிப்படையில் பெண்கள் பிரச்சனைகளை எதிர்கொள்ளுதல் குறித்துப் பேசினார். அனைத்து உயிரினங்களிலும் பெண் உயிரினம் மட்டுமே வலிமை மிகுந்தது. ஆரம்பக் காலத்தில் முதலில் இடம்பெயர்ந்த மக்கள் தாய்வழிச் சமூகமாக எந்தப் பிரச்சனையுமின்றி வாழ்ந்தனர். இரண்டாவதாக வந்தவர்களே தந்தைவழிச் சமூகமாகப் பெண்களை அடிமைப்படுத்தும் சமூகமாகப் பல கட்டுப்பாடுகளைக் கொணர்ந்தனர். பெண்கள் தங்கள் வலிமையை மறந்து ஆண்களைப் போற்றத் தொடங்கியதோடல்லாமல் தங்கள் வழித்தோன்றல்களையும் அப்படியே வளர்த்து அதுவே இன்று இயலாமையாக உருவெடுத்திருக்கிறது என்பதைச் சமயங்கள், வழிபாடு, மணமுறைகள், சடங்குகள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் போன்ற ஆதாரங்களுடன் வரலாறு, பண்பாட்டு ரீதியாகவும் தெளிவாக விளக்கினார். இன்னும் பெண் என்பவள் இருவித மனநிலையினை உடையவள். இதை ஆண்கள் பயன்படுத்திக் கொள்ளுகின்றனர். சிந்தனையே இல்லாமலும் அதே நேரம் மிக அதிகப்படியான சிந்தனையும் கூடாது. படித்தவர்களிடம்தான் அதிகம் தயக்கமும் பயமும் காணப்படுகிறது. இந்நிலை மாறவேண்டும். சூழ்நிலைக்குத் தகுந்தவாறு பிரச்சனைகளை எதிர் கொள்ளும் மனம் வேண்டும் என்றும் கூறினார்.

வழக்கறிஞர் கிருபா முனுசாமி பெண்கள் தங்கள் பிரச்சனைகளைச் சொல்வதற்கு இங்கு தளமே இல்லை என்று தொடங்கி வரலாற்றடிப்படையில் சட்டம் குறித்துப் பேசினார். முகலாயர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சி வரைக் குற்றங்கள் மட்டுமே சட்ட அடிப்படையில் பார்க்கப்பட்டன. அவர்கள் சமயம் மற்றும் பண்பாட்டு விசயங்களில் தலையிடக்கூடாது என்று நினைத்தனர். பாலியல் வன்கொடுமைச்சட்டம், பெண்கள் சொல்வதை நம்பவேண்டும் என்கிற நிலைப்பாடு போன்றவை கொண்டுவரப்பட்டதன் பின்னணியினைப் பாப்ரிதேவி, மதுரா, சக்தி வாஹிணி போன்ற வழக்கு விவரங்களை அடிப்படையாகக் கொண்டு விளக்கினார். இன்றும் நீதி மன்றங்கள், பிற இடங்களிலும் பாலினம், சாதி குறித்த பாகுபாடுகள் இருப்பதைத் தன் அனுபவங்களின் வாயிலாக எடுத்துரைத்தார்.

பெண்களுக்குப் பெண்களே எதிரிகளாகவும் உதவும் மனப்பான்மை இல்லாதிருப்பதும் மாறவேண்டும். நாமனைவரும் ஒரே குரலாக இருக்கவேண்டும். அப்பொழுதுதான் சட்டம், நீதிமன்றம் இன்னும் பிற அமைப்புகள் எல்லாம் நமக்குப் பயனுள்ளவையாக அமையும். நீதி மன்றங்களில் சாட்சி என்பது மிகவும் முக்கியம். பெண்கள் அதற்கு முன்வருவதில்லை. மூன்றாம் நபராக முகத்தைக் காட்டாமல் பாதிக்கப்பட்டவருக்கு உதவிசெய்யலாம். நாம் ஒற்றுமையாக முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பள்ளிகளிலேயே குழந்தைகளுக்குத் தற்காப்புக் கலையையும் உடல் தொடர்பான விசயங்களைச் சொல்லித்தருவதுமே பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பாக அமையும் என்று தலைவர் சுபாஷிணி அவர்கள் கூறப் பின் பங்கேற்பாளர்களின் வினாக்கள், கலந்துரையாடலுடன் கருத்தரங்கம் நிறைவுபெற்றது.

அறிக்கை தயாரிப்பு: முனைவர் பாப்பா

You may also like

Leave a Comment