Home 2020 Women Conference நாள் 3: செம்மை மாந்தர்!

நாள் 3: செம்மை மாந்தர்!

by Malarvizhi Baskaran
0 comment

செம்மை மாதர் (10-07-2020)

பல்துறைப் பெண்ணாளுமைகள் என்கிற பொருளிலமைந்த மூன்றாம் நாள் கருத்தரங்கிற்குத் திருமிகு தர்மசீலி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். திருமிகு வசந்திரவி அவர்களின் நெறியாளுகையுடன் இன்றைய நிகழ்வு கல்வியில் பெண்கள் அன்றும் இன்றும், இலக்கியத்தில் பெண்கள், தொழில் நுட்பத்தில் பெண்கள், வரலாற்றில் முதன்முதலில் தடம் பதித்த பெண்கள் என்கிற நான்கு தலைப்புகளில் நான்கு ஆளுமைகளால் நிகழ்த்தப்பெற்றது.

பெண் கல்வி கற்பது சுயமாக முடிவெடுக்கும் வாய்ப்புகளை உருவாக்கும், அதிகமான வாசிப்பு திறந்த மனப்பான்மையை வளர்க்கும், அது ஆரோக்கியமான சமுதாயத்திற்கு வழி வகுக்கும் என்கிற தனது நோக்கவுரையை முனைவர் சுபாஷிணி முதலில் முன்வைத்தார்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் செயலர் முனைவர் தேமொழி ஒவ்வொரு கால கட்டத்திலும் பெண் கல்வியின் நிலை, பெண் கல்விக்கான தடைகளும் காரணங்களும் குடும்பம் மற்றும் சமூகத்தில் பெண் கல்வி குறித்த சிந்தனைகள், இன்றும் பெண் கல்வியின் நோக்கத்தில் ஒன்றாக நல்ல மணமகனைத் தேர்ந்தெடுத்தல் என்பது அமைந்திருப்பதையும், இந்தியாவில் இந்திராகாந்தி மற்றும் காமராசர் காலத்தில் கல்வியில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் பெண் கல்வி வளர்ச்சிக்குக் கொஞ்சம் உதவியமை போன்றவை பற்றிப் பேசினார். இன்றும் கல்லூரிகளில் பெண் துறைத்தலைவர்கள், இருபாலரும் இணைந்து செயல்படும் விழாக்கள், பணியிடங்களில் சமவிகித வாய்ப்பு கிடைக்காமை, நடத்தப்பெறும் கருத்தரங்குகளில் பேசுவதற்குப் பெண்களுக்குத் தரப்படும் முன்னுரிமை குறித்த கணக்கெடுப்புகளையும், அரசு கொண்டு வந்த நுழைவுத் தேர்வு மாறுதல்கள் ஒடுக்கப்பட்ட பெண்களின் தொழிற்கல்விக்குப் போடும் தடை, அதனால் அவர்கள் கனவு கனவாகவே இருப்பது ஆகிய கருத்துக்களைச் சான்றுகளுடன் பேசினார்.

இலக்கியங்கில் பெண்கள் பற்றிப் பேசிய முனைவர் மஞ்சுளா அவர்கள் சங்ககாலத்தில் கல்வி பரவலாக்கப்பட்டிருந்தது, கருத்துச்சுதந்திரம் இருந்தது, பெண்கல்வி மறுக்கப்படவில்லை என்றும் சங்கப்புலவர் வெண்ணிக்குயத்தியார், வெளிப்படையாகத் தன் காதலைக் கூறிய ஆண்டாள், சமையலறைதான் உன் அதிகாரம் என்று சொல்லிக் கொடுக்கப்பட்ட அடிமைத்தளையிலிருந்து வெளிவரக் கதை எழுதிய அம்பை, பெண் உடல் அரசியலைக் கவிதையாக்கிய சல்மா ஆகியோரது படைப்புகளை விளக்கியதோடு அப்படைப்புகள் அவ்வக் காலகட்டத்தைப் பிரதிபலிப்பதோடு காலத்தின் கலகக் குரல்களாக ஒலித்தவை என்றே பார்க்க வேண்டும் என்றும் பேசினார்.

அறிவியல் சிந்தனை அக்காலத்திலிருந்தே பெண்களுக்கு இருந்திருக்கிறது என்று வரலாற்றடிப்படையில் துவங்கிய பேராசிரியர் மாலா நேரு தொழில் நுட்பத்துறையில் பெண்களுக்கான நிலை குறித்துப் பேசினார். உலக அளவில் பார்க்கும்போது இந்தியாவில் அறிவியலில் பெண் பங்களிப்பு குறைவுதான், தொழில் நுட்பத்தில் பெண்கள் தலைமை ஏற்காததற்குக் காரணம் குடும்பச்சூழல், பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண்களின் திறமைகள் முடக்கப்படுவதும் என்று கூறியதோடு, பெண்களின் துறைசார் திறமைகளை முதலில் உலகிற்கு அறிமுகம் செய்ய வேண்டும், பெண்கள் ஒருங்கிணைந்து கருத்தரங்குகள், மாநாடுகளை நடத்த வேண்டும், சில தொழில் நிறுவனங்கள் செய்வது போலப் பெண்களுக்கென சிறப்பு வேலை நேரம், காலத்தை உருவாக்க வேண்டும் என்று வழிமுறைகளையும், பெண்களுக்குத் தன்னார்வமும் இலக்கும் இருந்தாலே சாதிக்கலாம், அறிவுசார் சமூகமே இன்றைய தேவை, அதற்குப் பெண் கல்வி இன்னும் பெண் தொழில் கல்வி அவசியம் என்றும் கூறித் தனது உரையை முடித்தார்.

சரித்திரம் பேசாமல் விட்ட பெண்கள் பற்றி வரலாற்றாளர் நிவேதிதா லூயிஸ் பேசினார். பொதுவுடைமையைப் பொதுவாக்கப் பாடுபட்டவரும் அரசியலில் திருப்பங்களை உருவாக்கியவருமான மணலூர் மணியம்மா, இந்தியாவின் முதல் பெண் பொறியாளர் ஏ. லலிதா, இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு அரசியலில் திருப்பங்களை உருவாக்கிய கதீஜா யாகூப் ஹாசன், இசைக்கு மதமில்லை என்று கூறிய இசுலாமிய நாதஸ்வரப் பெண் கலைஞர் காலிஷாபீ மெகபூப், சென்னைப் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண் மீனாட்சி, தமிழகத் தொல்லியல் துறையில் பணி செய்த மார்க்சிய காந்தி உள்ளிட்ட எட்டு பெண்கள் பற்றிப் பேசினார். பெண்கள் பற்றிய வரலாறு அதிகம் எழுதப்படவில்லை, சிறுபான்மையினப் பெண்களின் வரலாற்றை மீட்டெடுக்க வேண்டும், தொழில்நுட்பம் மிகுந்த இன்றைய காலகட்டத்தில் நாம் இன்றைய பெண்களின் வரலாற்றை நாம் ஆவணப்படுத்திவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அறிக்கை தயாரிப்பு:  முனைவர் பாப்பா

You may also like

Leave a Comment