Home 2020 Women Conference நாள் 2: பருத்தி, நெசவு – நம் பண்பாடு

நாள் 2: பருத்தி, நெசவு – நம் பண்பாடு

by Malarvizhi Baskaran
0 comment

நெசவு போற்றுவோம் (09-07-2020)

இரண்டாம் நாள் கருத்தரங்கு நெசவு போற்றுவோம் என்கிற தலைப்பில் பருத்தி, நெசவு – நம் பண்பாடு என்று நெசவுக்கலையின் இன்றைய நிலை மற்றும் அதனை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்தது. இன்றைய கருத்தரங்கு ஓசை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வி அகிலா செழியனின் வரவேற்புரையுடன் தொடங்கியது.

தமிழ் மரபு அறக்கட்டளை நிறுவனர் முனைவர் சுபாஷினி, சேலம் ஆரண்யா அல்லி இயற்கை பண்ணை உரிமையாளர் ஆரண்யா அல்லி மற்றும் அமெரிக்கா ‘டிரடிஷனல் இந்தியா’ நிறுவனத்தின் புஷ்பா கால்டுவெல் ஆகிய மூவரும் இந்த நிகழ்வின் சிறப்புரையாளர்கள். மூவரும் நெசவுத் தொழிலை மீட்டெடுப்பதற்கு முழு மூச்சுடன் இயங்கிக் கொண்டிருப்பவர்கள்.
சுபாஷிணி அவர்கள் தமது நோக்கவுரையோடு கைத்தறித் தொழில், தொழிலாளர் நிலை, தங்கள் குழு சென்ற மரபுப்பயணம், களப்பணி பற்றிப் பேசினார். கைத்தறி குறித்துத் தம் அமைப்பின் ஆவணங்களான ஒலி, ஒளிப்படக் காட்சிகளையும் ஒளிபரப்புச் செய்தார். இக்காட்சிகள் நெசவுத் தொழிலாளர்களின் இன்றைய வாழ்க்கை நிலையைப் பிரதிபலிப்பதாக இருந்தது.

வேளாண்மைக் குடும்பத்தைச் சேர்ந்த ஆரண்யா அல்லி அவர்கள் நெசவுத் தொழிலாளர்களுடன் வாழ்ந்தும் தொழில் செய்வதோடு இயற்கை வேளாண்மையை ஊக்குவித்தும் வருபவர். நெசவுத் தொழில், தொழிற்கருவிகள், தொழிலாளர்கள், சேலை வகைகள், வடிவமைப்புகள், உற்பத்தி, சந்தைப்படுத்துதல், காலந்தோறும் நெசவுத்தொழில் சந்தித்த சிக்கல்கள், சவால்கள், அரசுச் சட்டங்கள், இன்றைய மாற்றங்கள், அனைத்திற்கும் மேலாகத் தமது அனுபவங்களையும் எடுத்துரைத்தார். இவரது நிறுவனம் இரண்டு முறை தேசிய விருது பெற்றிருக்கிறது.

சேலத்தில் பிறந்து இன்று அமெரிக்காவில் வசித்துவரும் புஷ்பா கால்டுவெல் அவர்கள் தம் சகோதரியுடன் இணைந்து இந்தியாவில் 40 தமிழ்க்குடும்பங்கள் உள்பட 100 நெசவாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் கையிலெடுத்துச் செயலாற்றுகிறது இவரது டிரடிஷனல் இந்தியா என்கிற அமைப்பு, உழவும் நெசவும் அவருக்கு இரு கண்கள். வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் ஆதரவுடன் தாம் செயல்பட்டு வருவதையும் கூறினார். தமிழகத்தில் கல்லூரிகளில் கைத்தறி விழிப்புணர்வு முகாம்கள் நடத்திவருவதையும், தமிழ் மரபு அறக்கட்டளையுடன் இணைந்து சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடத்தப்பட்டது பற்றியும், தன்னோடு தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இப்பணியில் ஈடுபட்டிருப்பது, கைத்தறி உடுத்துவதன் நோக்கம் போன்ற கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

திருவள்ளுவர், தமிழ்த்தாய் உருவங்கள் மற்றும் தமிழ் எழுத்துக்கள் வரையப்பட்ட கைத்தறிச் சேலைகள் உருவாக்கப்பட்டு அமெரிக்கா மற்றும் ஜெர்மனியில் நடைபெற்ற தமிழ் விழாக்களில் விற்பனை செய்யப்பட்டது. இன்றைக்கு நெசவுத்தொழில் செய்து வருபவர்கள்தான் கடைசித் தலைமுறை. மக்கள் ஆர்வம் குறைந்து கொண்டே வருவது, இதனை அழியாமல் காப்பது நமது கடமை, நாம் செய்ய வேண்டியவை போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. நிகழ்வின் பங்கேற்பாளர்கள் நெசவுத் தொழிலை நசிய விடாமல் செய்யவேண்டும் என்று கூறியதோடு நிறைய வழிமுறைகளையும் சொல்லியது கருத்தரங்கின் நோக்கத்தைப் பாதி வெற்றி பெறச் செய்ததாகவே நினைக்கமுடிகிறது. இந்த நிகழ்வு முனைவர் பாப்பா அவர்களின் ஒருங்கிணைப்புடன் இனிதே முடிவடைந்தது.

அறிக்கை தயாரிப்பு: முனைவர் பாப்பா

You may also like

Leave a Comment