நாள் 1: துணிந்து சொல்!

பெண்கள் எதிர்நோக்கும் சமூகச்சிக்கல்கள்

ஐந்து நாட்கள் கருத்தரங்கின் முதல் நாள் நிகழ்வு அலிகார் பல்கலைக்கழகப் பேராசிரியர் சாந்தினி பீ அவர்களின் வரவேற்புரையுடன் தொடங்கியது. தமிழ் மரபு அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் சுபாஷிணி அன்றைய நிகழ்வுக்கான நோக்கவுரையில் வீடு, வெளி இரண்டிலும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை, பெண் ஒரு கருத்தினைக் கூறும்போது உடன் வெளிப்படுகின்ற எதிர்க் கருத்தினை எதிர் கொள்கின்ற சக்தி பெண்களுக்குத் தேவை, பொருளாதாரத்தில் உயர்வு மற்றும் பிறருக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் கொண்ட பெண்களும் வேண்டும் என்கிற நோக்கங்களை முன் வைத்ததோடு தமிழ் மரபு அறக்கட்டளையின் செயல்பாடுகளைக் களங்கப்படுத்தும் வகையில் பலர் பேசி வருகிறார்கள். அப்பேச்சுக்கள் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் என்று நம்புவோம் எனவும் பேசினார்.

பல்வேறு தளங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆறு ஆளுமைகள் தாம் படித்ததை, தள்ளி நின்று தாம் பார்த்ததை மட்டுமோ பேசாமல் தங்கள் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.
ஊடகங்களில் பெண்கள் எதிர் நோக்கும் சிக்கல்களைத் திருமிகு கிருத்திகா தரன் இணையத்தின் மூலம் பெண்கள் தம்மை உயர்த்திக் கொள்ளுவது சாத்தியமா? என்கிற வினாவுடன் தொடங்கி இணையம் பெண்ணினது அடையாளத்தை அழிக்கிறது, இணையத்தில் பயன்படுத்தப்படும் வசைச்சொற்கள் பெண்பாலைச் சார்ந்தவை, பெண்கள் இணையத்திற்கு இரையாவது, நண்பர்களை நம்ப முடியாமலும் செய்ய வைக்கும் இணையம் போன்ற கருத்துக்களை முன்வைத்ததோடு இணையம் பாலினமற்ற இணையமாக மாறவேண்டும், பாலினமற்ற சமூக மாற்றத்திற்குப் பெண்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

ஆசிரியரான முனைவர் செந்தமிழ்ச்செல்வி; குடும்பங்களில், பணிபுரியுமிடங்களில், வெளியிடங்களில் நிகழும் வன்முறையைப் பெண்களால் துணிந்து சொல்ல முடியவில்லை. என்றும் பள்ளிகளில் பெண்களும் சிறுமிகளும் படும் துன்பங்களையும் எடுத்துரைத்தார்.

ஆணவப்படுகொலைகள் பற்றிப் பேசிய முனைவர் சத்யாதேவி இது அதிகம் பேசப்படுவது கடந்த பத்து ஆண்டுகளாகத்தான். பெண் உடல் முதன்மைப்படுத்தப்படுவதும் உடைமை பொருளாகக் கருதப்படுவதும் அவளுக்கென மனம், அறிவு, வெளி இருக்கிறதென்று நினைக்காததும் இதற்குக் காரணம். சாதி குறித்த சிந்தனை படித்தவர்களிடம் அதிகம் காணப்படுகிறது, தனி மனித மாற்றம்தான் இதற்குத் தீர்வு என்றும் கூறினார்.
குடும்ப வன்முறை பற்றிப் பேசிய முனைவர் அனுசுயா வன்முறை என்பது அடிப்பது மட்டுமல்ல. உடல், உளம் மற்றும் பொருளாதாரம் ஆகிய மூன்று நிலைகளில் பெண்களுக்குக் குடும்ப வன்முறைகள் நடைபெறுகின்றன. 80% பெண்கள் இதை வெளியில் சொல்வதில்லை என்பதோடு சில கணக்கெடுப்புகளைக் கூறி அந்தக் கணக்கெடுப்புகளிலும் வேறுபாடுகள் காணப்படுவதைச் சுட்டிக் காட்டினார்.

சமுதாயத்தில் சாதீயச் சிக்கல்கள் பற்றிய தனது கருத்துக்களை முன்வைத்த வழக்கறிஞர் சினேகா சிறுவயதில் அவரது தந்தை பள்ளிப் படிவத்தில் சாதி சமயமற்றவர் என்று நிரப்பிச் சமர்ப்பித்ததையும் அதனால் அவரது குடும்பம் சந்தித்த அனுபவங்கள், கலப்புத் திருமணம் என்று கூறாமல் சாதி மறுப்புத்திருமணம் என்று கூறவேண்டும், சாதி என்பது பிறப்பு தொடங்கி இறப்பு வரை அனைவரிடத்திலும் இருக்கிறது என்பதோடு ஒவ்வொரு பிரச்சனைக்கும் பெண்களாகிய நாம் ஒன்றிணையவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மாற்றுத்திறனாளியாகத் தான் எதிர்கொண்ட சிக்கல்களைப் பள்ளி தொடங்கி கல்லூரி, பணியிடம், பொதுவெளி எனப் பேசிய உலகம்மாள் அரசுப் பள்ளியில் படித்தது வாழ்க்கையைக் கற்றுத்தந்ததாகப் பெருமையாகக் கூறினார். சுதந்திரம் நமக்குள்ளிருந்தே வரவேண்டும், அதைச் சரியான வழியில் கொண்டு செல்ல வேண்டும். நம்மையே முதலில் முன்மாதிரியாகக் காண வேண்டும், கட்டுப்பாடுகளை எப்படி உடைக்க வேண்டும் என்பதில் தெளிவும் அதில் முட்டி நிற்காமல் பாதையை உருவாக்கிக் கொள்ள வேண்டும், நமக்கான பொறுப்பை எப்படிக் கையாளுகிறோம் என்பது முக்கியம் என்று தெரிந்தாலே தடைகளிலிருந்து வெளிவர முடியும் என்று கூறினார்.

முதல் நாள் நிகழ்வு மூன்று மணிநேரம் மலர்விழியின் சிறப்பான நெறியாள்கை மற்றும் பங்கேற்பாளர்களின் வினாக்கள் மற்றும் கலந்துரையாடலோடு தொய்வின்றி நடந்து முடிந்தது.

 

அறிக்கை தயாரிப்பு : முனைவர் பாப்பா

Author: Malarvizhi Baskaran

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *