ஒரு காலத்தில் திருநங்கைகள் ’அலி’ எனவும் ‘ஒன்பது’ என்றும் பல்வேறு இழிபெயர்கள் கொண்டு அழைக்கப்பட்டனர். இவர்களை வட மாநிலங்களில் ‘கின்னர்’ என அழைத்தனர். இன்னும் கூட தமிழில் ’திருநங்கை’ என்று அழைக்கப்படுவது போல உரிய மரியாதையுடன் வட மாநிலங்களில் அவர்கள் பெயர் பெறவில்லை.
தமிழகத்தைப்போல் அனைத்து துறைகளிலும் திருநங்கைகள் வட இந்தியாவில் இன்னும் முன்னேறவுமில்லை. இதற்குக் காரணம் இன்னும் அவர்கள் சமூகத்தில் இழிவாகப் பார்க்கப்படுவது தான். கேலிக்குரியவர்களாகச் சித்தரிக்கப்படும் திருநங்கைகளை வட மாநிலவாசிகள் அரசியல்வாதிகளின் முகத்திரைகளைக் கிழிக்கப் பயன்படுத்துகின்றனர். தம் பகுதியில் பொதுமக்கள் நலனில் அக்கறை கொள்ளாத அரசியல்வாதிகளை எதிர்த்து தேர்தலில் போட்டியிட வைப்பதுடன், வாக்குகளும் அளித்து வெற்றி கொள்ள வைக்கின்றனர்.

ஷப்னம் மவுசி
திருநங்கைகளை பொது வாழ்வில் இறக்கி முக்கியப் பதவிகளுக்கு தேர்ந்தெடுப்பதில் மத்திய பிரதேச மாநிலம் பெயர் போனது. இதன் தலைநகரான போபாலின் முதல் திருநங்கை எம்எல்ஏவாக 1998ஆம் ஆண்டில் ஷப்னம் மவுசி என்பவர் சுஹாக்பூர் தொகுதியில் சுயேச்சையாக வெற்றி பெற்றார்.
மவுசி என்றால் இந்தியில் அத்தை எனப் பொருள்படும். சமூகநலனில் அதிகமாக ஈடுபட்டுவந்த ஷப்னம் மவுசி, ‘ஜீத்தி ஜிதாயே பாலிட்டிக்ஸ்(ஜேஜேபி)’ எனும் பெயரில் ஒரு அரசியல் கட்சியும் ம.பியில் துவக்கி நடத்தி வருகிறார். இவரது பெயராலேயே ஷப்னம் மவுசி’ கதை பாலிவுட் திரைப்படமாகவும் வெளியாகி இருந்தது. இதையடுத்து மத்திய பிரதேச மாநிலம் கட்னி நகராட்சிக்கு நாட்டின் முதல் திருநங்கை மேயராக கமலா ஜான் என்பவர் 1999இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது வெற்றி நீதிமன்றத்தில் வழக்காகத்தொடுக்கப்பட்டது. ஒரு திருநங்கை தேர்தலில் போட்டியிட முடியாது என வாதிடப்பட்ட வழக்கில் 2003இல் கமலா வென்றார்.
இரண்டாவது திருநங்கை மேயராக உத்திரபிரதேசத்தின் கோரக்பூரில் போட்டியிட்டு ஆஷா தேவி என்பவர் 2000ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.தொடர்ந்து உபி, பிஹார் மற்றும் உத்தராகண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் திருநங்கைகள் தேர்தலில் போட்டியிட்டு அரசியல் கட்சிகளை அதிர வைத்தனர்.
ஆனால், ஷப்னம் மவுசிக்கு பிறகு எவராலும் சட்டப்பேரவைக்கு வர முடியவில்லை. எனினும், மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு அதன் உறுப்பினர்களாயினர். இவர்களை பிஹார் மாநில அரசு ஒருமுறை சொத்து மற்றும் வீட்டு வரி வசூல் செய்ய நியமித்தது. இந்த முறையில், வரித்தொகையும் சிறப்பாகவே வசூலானதாக செய்தி.இது ஜுனியர் விகடன் இதழில் செய்தியாக வெளிவந்தது. திருநங்கைகளுக்கு செய்தி நாளேடுகளிலும் தொலைக்காட்சி ஊடகங்களிலும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டன.

கமலா மவுசி
விகடன் நிறுவனத்தில் கடந்த 2000 ஆண்டு முதல் வட மாநில சிறப்பு செய்தியாளராகப்பணியாற்ற திரு. ஆர்.ஷபிமுன்னா அவர்கள் கட்னி சென்று மேயர் கமலா ஜானை பேட்டி கண்டார். இது ஆனந்த விகடன் வார இதழில் வெளியானது. பொதுவாழ்க்கையில் இருந்தபோதிலும் பத்திரிகையாளர்கள் மீது ஒருவித அச்சம் திருநங்கைகளுக்கு இன்று வரை உள்ளது. இவர்களிடம் பேசினால் ஏதாவது விவகாரத்தில் சிக்க நேரிடுமோ என அவர்கள் அஞ்சுவது உண்டு. உதாரணத்துக்கு கட்னியில் மேயர் கமலா எந்த பத்திரிகையாளர்களையும் சந்திப்பது இல்லையாம். இதனால் முதலில் ஆர்.ஷபிமுன்னா அவர்களையும் அவர் சந்திக்க மறுத்திருக்கிறார். மிகுந்த பிரயத்தனத்துக்குப்பிறகு பேட்டியெடுத்தும் அது ஒருபக்கச் செய்தியாகவே வெளிவந்தது.
இதேபோல், உபியின் சட்டப்பேரவைக்கு 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் திருநங்கைகள் முதன்முறையாகப் போட்டியிட்டனர். கான்பூரில் போட்டியிட்டபோது அங்கே இவர்களால் வெற்றி பெறமுடியவில்லை. எனினும், அன்று அவர்கள் செய்த தேர்தல் பிரச்சாரம் குறித்து இன்னும் கூட உபியில் பேசப்படுகிறது. இதுவும் விகடனில் செய்தியாக வெளியானது. இந்தச்செய்திகளின் பின்னணியில் சத்தீஸ்கர் மாநிலத்தின் ஒரு திருநங்கையின் சம்பவம் மிகவும் முக்கியமானது. 2015 இல் சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்கர் நகர மேயராக மது நரேஷ் எனும் திருநங்கை வெற்றி பெற்றிருந்தார். அப்பகுதியில் ஓடும் ரயிலில் ஆடிப்பாடுவதையே தொழிலாய்க்கொண்டிருந்த இவர், சத்தீஸ்கரின் ராய்கர் நகர முதல் திருநங்கை மேயராகத் தேர்வானார்.
35 வயதான மது, 4,537 வாக்குகள் வித்தியாசத்தில் அப்போதைய பாரதிய ஜனதாவின் வேட்பாளர் குருஜி என அழைக்கப்படும் மஹாவீர் சௌகானை தோற்கடித்தார். தலீத் சமூகத்தைச் சேர்ந்த இவரது தேர்தல் பிரச்சாரத்தில் செலவான சுமார் 70,000 ரூபாயை சக திருநங்கைகள் ஆடிப்பாடி பொதுமக்களிடம் வசூல் செய்து அளித்துள்ளனர். சத்தீஸ்கரின் தொழில் நகரமான ராய்கரின் தேர்தலில் போட்டியிடுவது வரை மதுவிற்கு அரசியல் அனுபவம் கிடையாது. பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் அதே கட்சியைச் சேர்ந்தவர் அதற்கு முன் மேயராக இருந்தார். இந்தமுறை பாஜக மற்றும் காங்கிரஸில் ஏற்பட்ட உட்கட்சி பூசலால், அதன் அதிருப்தியாளர்களும் சுயேச்சை வேட்பாளரான திருங்கையான மதுவிற்கு ஆதரவளித்து வெற்றி பெறச் செய்தனர்.
இந்தச் செய்தி ‘இந்து தமிழ்’ நாளேட்டில் கடந்த ஜனவரி 6, 2015 இல் வெளியானது. மது நரேஷின் செய்தியை பார்த்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மூத்த நிர்வாகியும், ‘தீக்கதிர்; நாளேட்டின் தலைமை நிருபருமான பாலசுப்பரமணியம் சார் ஷபிமுன்னா அவர்களைத் தொடர்பு கொண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பிலான சாதனையாளர்கள் விருதை மது நரேஷுக்கு அளிக்க பரிந்துரைக்க விரும்புவதாகவும் விருதைப் பெற அவர் தமிழகம் வருவாரா என்று அறிந்து சொல்லுமாறும் கேட்டுக்கொண்டிருக்கிறார். இதற்காக, மது நரேஷை தொடர்பு கொண்ட போது அதை புரிந்துகொள்ளவும் முடியாமல் நம்பாமல் அஞ்சி, எந்த விருதும் தனக்கு வேண்டாம் என மறுத்து விட்டார்.
இது குறித்து அவரைத்தேர்தலில் போட்டியிட வைத்த ராய்கரின் நலன் விரும்பிகளை தொடர்பு கொண்டு கேட்டும் பலனில்லை. அப்போது ராய்கர் மாவட்ட ஆட்சியாராக ஒரு தமிழர் இருந்தார். ஆட்சியர் கூறியும் அந்த மேயர் தான் ராய்கர் நகரை விட்டு எங்கும் செல்ல மாட்டேன் எனக் கூறி விட்டார். அந்த அளவுக்கு அவர்களுக்கு சமூகத்தின் புதிய பக்கங்கள் மீதான பயம் இன்னும் இருக்கிறது.

மனாபி பந்தோபாத்யா
இவர்கள் தங்களின் நிலையை வீடுகளின் சுபகாரியங்களில் அவர்களது ஆட்டம், பாட்டங்கள் என்ற கழிப்புகளுடன் ஆசீர்வாதங்கள் பெற மட்டுமே பயன்படுத்தப்படுகின்றனர். இங்கே இவர்களில் இஸ்லாமியர்களே அதிகம் இருக்கின்றனர். எனினும், இவர்களுக்குள் எந்த மதவேறுபாடுகளும் இன்றி ஒன்றாகவே இணைந்து வட மாநிலங்களில் வாழ்கிறார்கள். ஆடிப்பாடி, பணம் பெற்றுப் பிழைப்பதே இவர்களது பிரதான தொழிலாக உள்ளது.
வட இந்தியாவில் திருநங்கைகளுக்குக் குடும்ப நிகழ்ச்சிகளில் நல்ல வருமானம் கிடைப்பதால், அவர்கள் தம் கல்வியை பற்றி சிந்திப்பது இல்லை.
தமிழகத்தை போல் மேற்கு வங்க மாநிலத்தில் திருநங்கைகள் இடையே சற்று முன்னேற்றம் காணப்படுகிறது. இம்மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவின் கிருஷ்ணா நகர் மகளிர் கல்லூரியின் முதல்வராக மனாபி பந்தோபாத்யா என்பவர் ஜூன் 7, 2015 இல் அமர்த்தப்பட்டார். முதல் திருநங்கை முதல்வரான இவர், பிலாஸபியில் முனைவர் பட்டம் பெற்றவர். இதற்கு முன் மனாபி, அங்குள்ள விவேகானந்தா சதோபார்ஷிகி மஹாவித்யாலாயா கல்லூரியில் இணைப்பேராசிரியாகவும் பணியாற்றி உள்ளார். இவரை போலவே மற்றொரு திருநங்கையான ஜோதி மண்டல் என்பவர் தனது 29 வயதில் இம்மாநிலத்திம் வடக்கு பகுதி லோக் அதாலத் நீதிமன்றத்தின் நீதிபதியாக அக்டோபர் 2017 இல் அமர்ந்தார்.
உபியின் அலிகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் ஒரு வினோதப் புகார் வந்தது. அதில் திருநங்கையர் சிலர் தங்களைப் போல் வேடமிட்டு ஆண்கள் சிலர் தம் பிழைப்பு நடத்தும் பகுதியில் நடமாடுவதாகப் புகார் அளித்தனர். இதனால் தமது பிழைப்பு பாதிக்கப்படுவதாகவும், அதை கேட்கச் சென்றால் அந்த போலி திருநங்கைகள் தம்மைத் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் காட்டி மிரட்டுவதாகவும் கூறி இருந்தனர். இந்தப் போலிகள் பலரும் திருமணமாகி குடும்பங்களுடன் இருக்கும் குற்றவாளிகள் எனவும் அப்புகாரில் திருநங்கைகள் குறிப்பிட்டிருந்தனர்.
வடமாநிலங்களில் மட்டுமல்லாது தென் மாநிலங்களிலும் இவர்கள் மதிப்பும் உரிமையும் பெற்றும் சமூகத்தில் சரிநிகர் நிலையில் வாழ நமது பங்கைச் செய்வோம்.
கட்டுரையாக்கம்:
சாந்தினிபி ஷபிமுன்னா
29-09-2020